அய்யம்பேட்டை அண்ணா மேல்நிலைப் பள்ளியில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாலாஜாபாத், ஜன. 22: வாலாஜாபாத் அடுத்த அய்யம்பேட்டை அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் காஞ்சிபுரம் தீயணைப்புத்துறையினர் சார்பில் தீ தடுப்பு முறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் முரளி தலைமை தாங்கினார். வகுப்பறைகளில் தீப்பிடித்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், வீடுகளில் தீ பிடித்தால் அதனை எளிய முறையில் எவ்வாறு அணைப்பது மற்றும் விபத்து நேரங்களில் முதலுதவி சிகிச்சை எப்படி அளிப்பது என்பது குறித்தும் இக்கூட்டத்தில் விளக்கி பேசினர். மேலும் எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் மாணவ, மாணவிகளிடம் தீயணைப்பு துறையினர் விளக்கினர்.

இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் செவிலியர் விபத்து நேரங்களில் முதலுதவி செய்வது அவசியம் குறித்தும் முதலுதவி செய்வதற்கு முன்பு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அல்லது 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிப்பது அவசியம் என்பது குறித்தும் விளக்கி பேசினர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன், தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் திருநாவுக்கரசு, அப்துல் பாரி, காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் உட்பட காஞ்சிபுரம் நிலைய தீயணைப்பு படையினர் மற்றும் மாணவ,மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: