சுறா மீன் பற்கள், எலும்புகளில் மறைத்து கடத்திய ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் ஒருவர் கைது

சென்னை: சுறா மீனின் பற்கள், எலும்புகளில் மறைத்து ₹33 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தியவரை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள், நேற்று முன்தினம் மாலை முதல் விமானத்தில் பயணம் செய்பவர்களை தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில், சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்தவர்களை, சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி அனுப்பினர்.அப்போது, சென்னையை சேர்ந்த முகமது சலீம் (54), பெரிய அட்டை பெட்டியுடன் வந்தார்.

அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அட்டை பெட்டியை ஸ்கேன் செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அட்டை பெட்டியை தனியாக வைத்துவிட்டு, முகமதுசலீமிடம் விசாரித்தனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசினார். பின்னர் அதிகாரிகள், அந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். அதில், பெரிய சுறா மீன் பற்கள், எலும்புகள் என மொத்தம் 14 கிலோ இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ₹8 லட்சம். அதை வெளியே எடுத்தபோது, அதனுள் உடைகள் மடித்து வைக்கப்பட்டிருந்தன.

அதையும் எடுத்தபோது, அதன் கீழ், கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்சிகள் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். அதன் மொத்த இந்திய மதிப்பு ₹33 லட்சம். தொடர்ந்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், முகமது சலீமை கைது செய்து விசாரித்தனர். அதில், ₹33 லட்சம் கரன்சிகள், கணக்கில் வராத ஹவாலா பணம் என்றும், அதை யாரோ அவரிடம் கொடுத்து அனுப்பியதும் தெரிந்தது.அதேபோல் சுறா மீன்களின் பற்கள், எலும்புகள் சிறந்த மருத்துவ குணம் கொண்டவை. அதன் மூலம் உயிர் காக்கும் பல அரியவகை மருந்துகள், சிங்கப்பூரில் தயாரிக்கப்படுவது தெரியவந்தது. மத்திய வன உயிரின காப்பகம், சுறா மீனின் பற்கள், எலும்புகள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல தடை விதித்துள்ளது. அந்த தடையை மீறி எடுத்து சென்ற குற்றத்துக்காக, சென்னை பெசன்ட் நகரில் உள்ள வன உயிரின குற்ற காப்பக அதிகாரிகளிடம், முகமது சலீமை ஒப்படைத்தனர். அவர்கள் அவர் மீது தனி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: