கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் ஒரே ஆண்டில் 46,309 பிரசவங்கள் மாவட்ட பொது சுகாதார துறை தகவல்

திருவள்ளூர்: கிராமப்புற அரசு மருத்துவமனைகளில்  பிரசவங்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு  திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 46,309 பிரசவங்கள் நடந்துள்ளன. தமிழக பொது சுகாதார துறைக்கு உட்பட்ட, திருவள்ளூர், பூந்தமல்லி சுகாதார மாவட்டங்களின் கீழ் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, 10 தாலுகா அரசு மருத்துவமனைகள், 14 வட்டார அரசு மருத்துவமனைகள், 60 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 2017-18ம் ஆண்டில், திருவள்ளூர் சுகாதார மாவட்டத்தில் 33,274 பிரசவங்கள், பூந்தமல்லி சுகாதார மாவட்டத்தில் 13,035 பிரசவங்கள் என மாவட்டத்தில் மொத்தம் 46,309 பிரசவங்கள் நடந்தன. இவற்றில், 2,749 அறுவை சிகிச்சை பிரசவங்கள் அடங்கும்.

இதற்கு மருத்துவ சேவை பணி மேம்பட்டிருப்பதுடன், அறுவை சிகிச்சை பிரசவம் போன்ற சிக்கலான பிரசவம்கூட தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக பார்க்கப்படுவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மாவட்ட பொது சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ் கூறுகையில், அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பதற்கு எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லை. கர்ப்பிணியின், உடல்நிலையை பொறுத்தே டாக்டர் முடிவு செய்கிறார்.

தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 100 யூனிட் ரத்தத்தை சேமித்து வைக்கும் உள்கட்டமைப்பு உள்ளது. இந்த பகுதியில் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் சிறப்பாக பணியாற்றுவது ஒரு காரணம்’ என்றார். அரசு பெண் மருத்துவர் ஒருவர் கூறுகையில், அறுவை சிகிச்சை பிரசவம் மூலம் குழந்தை மற்றும் தாய் இருவரையும் காப்பாற்றுகிறோம். முன்பு அறுவை அரங்கம், ரத்த வங்கி உள்ளிட்ட வசதிகள் இல்லை. தற்போது, அவை அதிகரித்து உள்ளன’’’’ என்றார்.

Related Stories: