டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 7 பேர் பிடிபட்டனர்

ஆவடி, ஜன.22: ஆவடி அருகே அண்ணனூரில் டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். ஆவடியை அடுத்த அண்ணனூர் ரயில் நிலையம் அருகே முட்புதரில் ஒரு கும்பல் மறைந்திருந்து கொள்ளையடிக்க திட்டம் கொண்டிருப்பதாக திருமுல்லைவாயல் போலீசாருக்கு நேற்று மதியம் ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியதுரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ்குமார், பிரதீப் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்றனர். இதனையடுத்து,  7 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்து திருமுல்லைவாயில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அனைவரும் சேர்ந்து அண்ண்னூரில் உள்ள அரசு மதுபான கடையை உடைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டதை ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் திருமுல்லைவாயல், வைஷ்ணவி நகரை சேர்ந்த ஞானவேல் (37), வில்லிவாக்கம், பாரதி தெருவைச் சேர்ந்த குமரேசன் (25), ஜானகிராம் (27), ஐ.சி.எப், நியூ ஆவடி ரோட்டை சேர்ந்த கார்த்திகேயன் (20), அலெக்ஸ் (23), சுரேஷ் (23), ராஜேஷ் (23) ஆகியோர் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து இரண்டு கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். பின்னர், போலீசார் அவர்களை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின்பேரில் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: