ஆவடி, தாம்பரம் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்: 1000 கிலோ பறிமுதல்

ஆவடி:  தமிழகத்தில் 14வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் அரசு தடைவிதித்துள்ளது. இதனை அடுத்து, நேற்று  ஆவடி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆவடி வருவாய் ஆய்வாளர் நடராஜன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆவடி சி.டி.எச் சாலை, ஆவடி டேங்க் பேக்டரி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள துணிக்கடைகள், ஸ்வீட், பேக்கரி கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் உணவகங்களில் சோதனை செய்தனர்.   இதில்,  இரு ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து அதிகாரிகள் ஓட்டல்களில் இருந்த 25 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், அதிகாரிகள் அதனை பயன்படுத்திய உணவகங்களுக்கு தலா ₹2,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அரசால் தடை செய்யப்பட்ட மக்காத பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல்,  விற்பனை செய்தல், சேமித்து வைத்திருத்தல், பயன்படுத்தல் மற்றும் விநியோகம் செய்தல் கூடாது. அவ்வாறு வைத்திருந்தால் அதை நகராட்சி, வருவாய் அலுவலகத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றனர்.

தாம்பரம்: தாம்பரம் நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மேற்கு தாம்பரம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல கடைகளில் இருந்து  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1000 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள்  உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கு ₹6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Related Stories: