அம்பத்தூர் தொழிற்பேட்டையில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற இ.பி.சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டை இ.பி சாலை முற்றிலும் சிதிலமடைந்து, ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் தொழிலாளர்களும், மாணவர்களும் அவதிப்படுகின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள இ.பி. சாலையில் ஏராளமான கம்பெனிகள், துணை மின் நிலையம், மாநகராட்சி பள்ளிக்கூடம், குடியிருப்புகள் அமைந்துள்ளன. இச்சாலையை பயன்படுத்தி கம்பெனிகளுக்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். மேலும், மங்களபுரம், பட்டரைவாக்கம் பகுதி மக்களும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன், மெட்ரோ வாட்டர் நிறுவனம் சார்பில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது, இந்த பணிகள் முழுமையாக முடியாமல் கிடப்பில் கிடக்கிறது.

பணி முடிந்த இடத்தில் சீரமைப்பு பணி நடைபெறாததால் சாலையின் பல இடங்களில் குண்டும் குழியுமாக கிடைக்கிறது. இதனால், இச்சாலை வழியாக செல்லும் தொழிலாளர்கள்அவதிப்பட்டு வருகின்றனர். சாலை பள்ளங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேற்கண்ட பகுதி மக்களும் சாலையில் நடமாட முடியாமல் சிரமப்படுகின்றனர். தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களும் சாலையில் உள்ள பள்ளங்களில்  சிக்கிக்கொள்கின்றன. இதனால், அப்பகுதியில் அடிக்கடி மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.  

அவசர தேவைக்கு தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்களும் வர முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்பத்தூர் தொழிற்பேட்டை இ.பி சாலையில் நடைபெறும் பாதாள சாக்கடை பணியை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும். பணி முடிந்த பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும், என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: