நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்தில் சாலை அமைக்க விதிமீறி வெட்டப்பட்ட மரங்கள் பொறியாளர்களின் நடவடிக்கையால் சர்ச்சை

சென்னை: நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்தில் சாலை அமைக்க விதிகளை மீறி மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிண்டி சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் ஒருங்கிணைந்த நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு, திட்டங்கள், சென்னை பெருநகரம் பிரிவு உட்பட 8 தலைமை பொறியாளர்களின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகங்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள கோட்டங்களை சேர்ந்த பொறியாளர்கள் தங்களது பகுதிகளில் நடக்கும் திட்டங்கள் சார்ந்த பணிகள் குறித்து விவாதிப்பதற்காக அவ்வப்போது வந்து செல்வார்கள். மேலும், பொதுமக்களும் தங்களது பகுதிகளுக்கு சாலை வேண்டுமென்றால்  தலைமை பொறியாளரை சந்தித்து மனு கொடுத்தும் வருகின்றனர்.

அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த அலுவலகத்திற்கு வருவதற்கு வசதியாக ஒருபுறத்தில் மட்டும் சாலை அமைக்கப்பட்டிருந்தது. அந்த சாலை வழியாக வாகனங்கள் வருவதும், போவதுமாக இருப்பதால், வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்திற்கு வாகனங்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருபுறமும் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அந்த வளாகத்தில் பழமையான மரங்களை மாற்றி வேறொரு இடத்தில் வைத்து விட்டு சாலை அமைக்க முதலில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மரங்களை மாற்றி வைப்பதற்கு பதிலாக திடீரென இரவோடு, இரவோடு அந்த மரங்கள் அனைத்தைம் வெட்டி விட்டனர்.

பழமையான மரங்களை வெட்ட வேண்டுமென்றால் வனத்துறையிடம் அனுமதி கேட்க வேண்டும். ஆனால், மரங்களை வெட்டுவதற்கு அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. பொறியாளர்கள் தங்களது அலுவலகத்திற்குள் இருப்பதால், அவர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் வெட்டியதாக தெரிகிறது. தொடர்ந்து வெட்டபட்ட மரங்களை சிலவற்றை அகற்றி விட்டனர். மீதமுள்ள மரங்களை அங்கேயே போட்டு விட்டனர். இந்த நிலையில், அந்த இடத்தில் புதிதாக சாலை அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாலை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சாலை அமைப்பதற்காக மரங்களை வெட்டிய பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: