விசாரணைக்கு அழைத்து சென்று சித்ரவதை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ.4 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: விசாரணைக்கு என்று அழைத்து சென்று மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கெருகம்பாக்கத்தை சேர்ந்த ரவி என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: எனது மனைவி கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். எனது மகன் பாக்கியன், கொலையாளிகளை பார்த்தாக, மாங்காடு காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இதையடுத்து, எனது மகனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்திய போலீசார், சட்ட விரோதமாக மூன்று நாட்கள் அடைத்து வைத்து, சித்ரவதை செய்தனர். எனவே, உதவி கமிஷனர் அழகு, இன்ஸ்பெக்டர் ஆதிமூலம், எஸ்.ஐ கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.ஐ லாரன்ஸ் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சாட்சிகள் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும் போது நான்கு போலீஸ் அதிகாரிகளும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு தலா, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதில், மனுதாரருக்கு, மூன்று லட்சம், அவரது மகனுக்கு ஒரு லட்சம் ரூபாயை, தமிழக அரசு ஒரு மாதத்தில் வழங்க வேண்டும். தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: