துப்புரவு பணியாளர்கள் நலன் பாதுகாப்பதில் அரசு செயல்பாடு திருப்தியில்லை தேசிய நல வாரிய தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, ஜன.22: தேசிய துப்புரவு பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் மன்ஹர் வால்ஜி பாய் ஷாலா சென்னை, தலைமை செயலகத்தில் ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்த பிறகு தேசிய துப்புரவு பணியாளர்கள் நல வாரிய தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது: துப்புரவு பணியாளர்களின் இறப்பு குறித்து தமிழக அரசு வழங்கக்கூடிய புள்ளி விவரங்களும், சங்கங்களின் புள்ளி விவரங்களும் வெவ்வேறாக உள்ளது. எனவே சென்னை, மதுரை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 நகரங்களில் மீண்டும் கணக்கெடுக்கப்பட உள்ளது.

அதேபோல மாநில அளவில் துப்புரவு பணியாளர் நல வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளதோடு, 2 மாதத்திற்குள் அமைக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மலக்குழியில் இறங்கி பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு முழுமையாக தரவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகம் உள்ளது. இந்திய அளவில் தமிழகத்தில்தான் உயிரிழப்பு அதிகம் உள்ளது. துப்புரவு பணியாளர்களுக்கான நலன்களை பாதுகாப்பதிலும், திட்டங்களை செயல்படுத்துவதிலும், தமிழக அரசு செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை.

தொழிலாளர் நலத்துறை சட்டத்தின்படி பணியாளர்களுக்கு குறைந்தபட்சமாக 642 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என உள்ளது. ஆனால், தற்போது மாநகராட்சிகளில் 362 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே, ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட உள்ளது. மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related Stories: