களக்காடு அருகே பயணிகள் நிழற்கூடம் சீரமைப்பு

களக்காடு,ஜன.22: களக்காடு அருகே  இடிந்து  விழும்  நிலையில் இருந்த பயணிகள் நிழற்கூடம் தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. களக்காடு அருகே உள்ள தம்பிதோப்பில் கடந்த 1995-1996ம் ஆண்டில் புதியதாக பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. நாளடைவில் பயணிகள் நிழற்கூடம் பராமரிப்பு இன்றி மிகவும் பழுதடைந்து காட்சி அளித்தது நிழற்குடையின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தது. இதனால் காங்கிரீட் கம்பிகள் வெளியே தெரிந்தன. கட்டிடத்திலும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டது. எனவே பயணிகள் நிழற்கூடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் தருவாயில் காணப்பட்டது. இந்த ஆபத்தை  உணராமல் பயணிகள் இந்த பேருந்து  நிழற்கூடத்தை பயன்படுத்தி  வந்தனர்.

 தம்பிதோப்பு, குடில்தெரு, சிவசண்முகபுரம் மற்றும் சுற்றுபுற கிராம மக்கள் இங்கு வந்து தான் வெளியூர் செல்ல பஸ்களில் ஏறி செல்கின்றனர்.

கல்லூரி, மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் காலை, மாலை வேளைகளில் இந்த பயணிகள் நிழற்கூடத்தில் காத்திருக்கின்றனர். . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து நிகழ்வதற்கு முன்  இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த நிழற்கூடத்தை அகற்றி  விட்டு அங்கு  புதிய நிழற்கூடத்தை அமைத்து  தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை  விடுத்தனர். இதுகுறித்து கடந்த 3ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து களக்காடு பேரூராட்சி நிர்வாகத்தினர் அபாய நிலையில் இருந்த பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கூரை அப்புறப்படுத்தப்பட்டு, புதிய மேற்கூரை அமைக்கப்படவுள்ளது.

Related Stories: