கிறிஸ்துமஸ் தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும்

தூத்துக்குடி, ஜன. 22: இயேசுநாதர் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களில் பிறந்த நாட்களில் மதுக்கடைகளை மூடவேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். கல்லாமொழி புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை ஜேம்ஸ்பீட்டர் தலைமையில் கல்லாமொழி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டர் சந்தீப்நந்தூரியிடம் மனு அளித்தனர். மனு விவரம்: தமிழகத்தில் 5 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். மதுக்கடைகள் இல்லாத தமிழகம் உண்டாக வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம் ஆகும். உழவர் தினம், திருவள்ளுவர் தினம் குடியரசு தினம், சுதந்திரதினம், மே தினம், நபிகள் நாயகம் பிறந்ததினம், வள்ளலார் பிறந்ததினம், காந்திஜெயந்தி மகாவீர்ஜெயந்தி ஆகிய தினங்களில் மதுக்கடைகளை மூடுமாறு அரசு சட்டம் இயற்றி உள்ளது. அதுபோல், இயேசு பிறந்ததினமான கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு டிச 24, 25 ஆகிய இரு தினங்களிலும், மேலும் முக்கிய தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாட்களிலும் மதுக்கடைகளை மூட அரசுக்கு பரிந்துரைக்கவேண்டும்.

 இவ்வாறு மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி: இதனிடையே நாலுமாவடியில் மதுக்கடை திறக்ககூடாது என திருச்செந்தூர் தாலுகா நாலுமாவடி பணிக்கநாடார்குடியிருப்பு பொன்சுந்தர், மூக்குப்பீறி கூட்டுறவு வங்கி தலைவர் பிரபாகரன், ஆகியோர் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:  நாலுமாவடி கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை வருவதாக அறிந்தோம். எங்கள் ஊரில் மதுபானக்கடை அமைய உள்ள இடம் மக்கள் போக்குவரத்து மிகுந்த மற்றும் பள்ளிகள் உள்ள இடம். ரயில்வே தண்டவாளம் அருகில் உள்ளது. பெண்கள் அதிகம் நடமாடும் இடம் என்பதால், அந்த மதுபானக்கடையை எங்கள் ஊரில் அமைக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: