தென்பழநி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்

கழுகுமலை, ஜன. 22: தென்பழநி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளானோர் வடம்பிடித்து இழுத்து நிலையத்தில் சேர்த்தனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் பக்தர்களால் தென்பழநி என அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையாகி, அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளிவீதியுலா நடந்தது.

இந்நிலையில் தைப்பூசத்திருநாளான நேற்று  தேரோட்ட வைபவம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜைகள் நடந்தன. காலை 6 மணிக்கு மேல் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானை சட்ட ரதத்திலும், விநாயகப் பெருமாள் கோ ரதத்திலும் எழுந்தருளினர். இதையடுத்து காலை 9.45 மணிக்கு தேரோட்டம் நடந்தது. கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளரும், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி செயலாளருமான சுப்பிரமணியன், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட வர்த்தக அணி செயலார் ஜெயக்கொடி, திமுக கழுகுமலை பேரூர் கழக செயலாளர் கிருஷ்ணகுமார், தொழிலதிபர்கள் ராஜேந்திரன், முத்தால்ராஜ், 6வது வார்டு முன்னாள் கவுன்சிலர் மகேஸ்வரன், கிருஷ்ணா சிட்பண்ட்ஸ் மாரியப்பன் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கிவைத்தனர்.

இதில் கழுகுமலை மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திரளாக வந்திருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க வடம்பிடித்து இழுத்து நண்பகல் 12 மணிக்கு நிலையத்தில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

 இதையொட்டி கோவில்பட்டி ஜீவ  அனுகிரக பொதுநல அறக்கட்டளை இயக்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  கோவில்பட்டி அண்ணா பஸ்நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் ராஜகோபால், அன்னதானத்தை துவக்கி வைத்தார். இரவு 9 மணிக்கு மேல் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர். இதை திரளானோர் தரிசித்தனர்.

 ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், தலைமை எழுத்தர் பரமசிவம், உள்துறை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். மேலும் கழுகுமலை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: