பரமன்குறிச்சியில் பொங்கல் சூதாட்டத்தில் மோதல் தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்

உடன்குடி,  ஜன. 22:  உடன்குடி,  பரமன்குறிச்சி, செட்டிவிளை, வாத்தியார்குடியிருப்பு மற்றும் ஆட்கள்  நடமாட்டம் குறைவாக காணப்படும் பகுதிகளில் வழக்கமாக சூதாட்டம் நடந்து  வருகிறது. அதிகாரிகள் யாரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ச்சியாக  நடந்து வரும் சூதாட்டத்தில் ஈடுபடும் பலர் தங்கள்து நகைகள், சொத்துகள்,  அதிகளவில் பணத்தை வைத்து விளையாடி வருகின்றனர். இதன்காரணமாக பலரது  குடும்பங்கள் பிரிந்தும், பல்வேறு குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன.  சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் பலரும் அதிலிருந்து விடுபடமுடியாமல்  இருந்து வருகின்றனர்.  

 உடன்குடி அருகேயுள்ள பரமன்குறிச்சி  காட்டுப்பகுதியில் பொங்கலையொட்டி அங்குள்ள ஒரு தோட்டத்தில் சிலர் சீட்டு  விளையாடினர். இந்த விளையாட்டு இரவு பகலாக நீடித்தது. அப்போது பணம்  வைப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் அவர்களுக்குள் திடீரென்று மோதல்  ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஒருவர் தோட்டத்தில் கிடந்த விறகு  கட்டையால் தொழிலாளியை சரமாரியாகத் தாக்கினர். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் மிதந்ததால் இறந்துவிட்டதாக கருதி அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதனால் அடிபட்ட தொழிலாளி இருநாட்களாக அங்கேயே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் தோட்டத்து உரிமையாளர் பொங்கல் முடிந்து அங்குசென்றபோது தொழிலாளியின் முனகல் சத்தம் கேட்டு மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில்  சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்து விரைந்துவந்த பரமன்குறிச்சி போலீசார், தாக்கப்பட்ட தொழிலாளி விவரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.                     

Related Stories: