ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை பொதுமக்கள் அமைதி காக்க கலெக்டர் வேண்டுகோள்

தூத்துக்குடி, ஜன. 22: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் பொதுமக்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவேண்டாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பத்திரப்பதிவு துறையில் ஏற்படும் காலதாமதத்தை குறைக்கும் வகையில் ஆன்லைன் மூலமாக பத்திரப்பதிவு மற்றும் கணக்கு வழக்குகளை மேற்கொள்ளும் முறையினை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது இதன் மூலம் அரசு ரீதியான கணக்கு வழக்கு முறைகளை ஆன்லைன் மூலமாகவே பொதுமக்களும் அரசு ஊழியர்களும் அவரவர் வீட்டில் இருந்தபடியே செய்து முடிக்க முடியும் இதற்காக பத்திரப்பதிவு அலுவலகத்துக்கோ, மாவட்ட கருவூலத்துக்கு வர வேண்டிய அவசியமில்லை.

சிறு குறு தொழில் வளர்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100% எட்டி பிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர பெரிய தொழிற்சாலைகள் ஈர்ப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர் மாநாடு உதவிகரமாக இருக்கும். ஏற்கனவே கடந்த முதலீட்டாளர் மாநாட்டில் பெரிய தொழில் நிறுவனங்கள் வருவதாக ஈர்க்கப்பட்ட முதலீடுகள் செயல்படுத்த திட்ட வடிவு தேவைப்படும் என்பதால் அவை இன்னும் தூத்துக்குடிக்கு வருவதற்கு தாமதமாகலாம். இந்த முறை நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டின் பொழுது தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு பெரிய முதலீடுகளை ஈர்க்க திட்டம் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இலக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் நமது மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் 3 படகுகளையும் மீட்டுத்தர மனு அளித்துள்ளனர்.

அதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று படகுகளை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். அவர்அளித்த மற்றொரு பேட்டியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உறுதியாக உள்ளதால் பொதுமக்கள் எந்தவிதமான அச்சமும் அடையவேண்டாம். எனவே போராட்டங்களில் ஈடுபடவேண்டாம். வைகுண்டம் அணையிலிருந்து 20 எம்.ஜி.டி. திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆலையில் உள்ள குடியிருப்புகளுக்கு மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது’’ என்றார்.

Related Stories: