ஊட்டி மார்க்கெட் எதிரே வாகனம் நிறுத்த மீண்டும் அனுமதி

ஊட்டி, ஜன. 18: ஊட்டி மார்க்கெட் எதிரே உள்ள பார்கிங் பகுதியில் மீண்டும் வாகனங்களை நிறுத்த போலீசார் அனுமதியளித்துள்ளால், மார்க்கெட் வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சுற்றுலா  நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  அதேபோல், பல்வேறு தேவைகளுக்காக கிராமப்புறங்களில் இருந்தும் ஏராளமான மக்கள்  வந்துச் செல்கின்றனர். நகரில் உள்ள ஒரு சில பார்க்கிங்குகளையும் உள்ளூர்  வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். இதனால், வெளியூர்,  கிராமப்புறங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த போதுமான பார்க்கிங்  வசதிகள் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும்  அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக மார்க்கெட் எதிரில் நகராட்சி மேல்நிலைப் பள்ளி செல்லும் சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும்  இரு சக்கர வாகனங்கள் நிறுத்த அனுமதியிருந்தது. ஆனால், திடீரென  காவல்துறையினர் கடந்த இரு மாதங்களுக்கு முன் இந்த பார்க்கிங்கில் வாகனங்களை  நிறுத்தக் கூடாது என பேரிகார்டுகளை வைத்து அடைத்துவிட்டனர். இதனால், அங்கு  வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, மார்க்கெட்டிற்கு  காய்கறிகள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்களது  வாகனங்களை நிறுத்த முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். அதேபோல், மதிய  நேரத்தில் உணவிற்காக நகருக்குள் வரும் சுற்றுலா பயணிகளும் வாகனங்களை  நிறுத்த முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால், பொதுமக்கள்  மட்டுமின்றி, வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். இதனால், மீண்டும் இந்த  பார்க்கிங்கை திறக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து  மீண்டும் இந்த பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த காவல்துறை  அனுமதியளித்துள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகள்  அகற்றப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட  வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: