கலெக்டர் உத்தரவை மீறி இரவு நேரத்தில் கேரட் அறுவடை

குன்னூர், ஜன.18: நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், உள்ளிட்டவை அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதில் குறிப்பாக  கேரட் அறுவடையில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஏராளமான சிரமங்களை  அனுபவிக்கின்றனர். கேரட் விவசாயம் செய்ய அதிக அளவில் பொருட் செலவு ஏற்படுவதால், அதனை ஈடுகட்ட விற்பனைக்காக கொண்டு செல்ல நேரம் தவறாமல் கடைபிடித்து வருகின்றனர். இங்கு விளைவிக்க கூடிய கேரட்டுகளை மேட்டுப்பாளையம், சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லபடுகிறது. இதற்கிடையே கேரட் அறுவடை செய்ய தொழிலாளர்கள் அதிகாலை 3 மணிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அவர்கள் காலை 8 மணி வரை கேரட் அறுவடை செய்து அதனை மூட்டைகளாக கட்டி லாரிகளில் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து தொழிலாளர்கள் லாரிகளில் உள்ள முட்டை மீது அமர்ந்தபடியே கடும் குளிரிலும் மலைப்பாதையில் பயணம் செய்து கேரட் கழுவும் இயந்திரம் உள்ள பகுதிகளுக்கு  கொண்டு சென்று அதை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.இதில் கேரட் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே செயல்படும் ஏஜன்ட்டுகள் பணத்திற்காக இரவு நேரங்களில் கேரட் அறுவடை செய்ய தொழிலாளர்கள் ஈடுபடுத்துகின்றனர். இரவு நேரத்தில் மலைப்பாதை வழியாக கனரக வாகனங்கள் செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு தொழிலாளர்கள் பலியாகும் நிலை நீடிக்கிறது. அதேபோல் வனவிலங்குகள் அச்சுறுத்தலும் இருப்பதால் கேரட் அறுவடைக்கு இரவு நேரஙகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்த கூடாது என கடநத் சில மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். தற்போது இந்த உத்தரைவையும் மீறி கேத்தி பாலாடா பகுதிகளில் இரவு நேரத்தில் கேரட் அறுவடைக்கு தொழிலார்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனவே இதுபோன்று அத்துமீறி கேரட் அறுவடைக்கு தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories: