மஞ்சூர் குடியிருப்பில் புகுந்த யானைகள் வீட்டு கதவை உடைத்ததால் மக்கள் பீதி

ஊட்டி, ஜன.18: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் முற்றுகையிட்ட காட்டு யானைகள், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன.  

நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.குறிப்பாக, உணவு மற்றும் தண்ணீரை தேடி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் காட்டு யானை மற்றும் காட்டெருமைகளால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.இந்நிலையில், மஞ்சூர் பகுதியில் தற்போது 7 காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன் மேல்குந்தா பகுதியில் முகாமிட்டிருந்த யானைக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு மஞ்சூர் அருகேயுள்ள கண்டிமட்டம் பகுதிக்கு வந்துள்ளன. தொடர்ந்து யானைகள் இங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது, அங்கிருந்த வாழை மரங்களை நாசம் செய்தன. பின்னர் சிவக்குமார் என்பவரின் வீட்டை உடைத்து அங்கிருந்த அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை சூறையாடி சென்றன. யானைகளை கண்ட சிவக்குமார் குடும்பத்தினர், அலறியடித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். மேலும், அப்பகுதியில் குடியிருப்புகள் முன் வைத்திருந்த பாத்திரங்கள் மற்றும் தண்ணீர் குடங்களை உடைத்து சேதம் ஏற்படுத்தின. மேலும், சில வீடுகளின் கதவுகளையும் உடைத்துள்ளன. யானைகளை கண்ட பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு பின் கதவு வழியாக ஓட்டம் பிடித்தனர். பின், அங்கிருந்துது பூதியாடா பகுதிக்கு சென்ற யானைகள் அங்குள்ள காய்கறி தோட்டம் மற்றும் விவசாய பயிர்களை துவம்சம் செய்தன.

தொடர்ந்து அந்த யானைக் கூட்டம் தேயிலை தோட்டம் வழியாக கெரப்பாடு ஆற்றின் கரையோரத்தில் முகாமிட்டுள்ளன. எந்நேரமும் இந்த யானைக் கூட்டம் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு வரலாம் என்பதால், குந்தா வனத்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதன் முறையாக மஞ்சூர் குடியிருப்பு பகுதிக்கு காட்டு யானைகள் வந்துள்ளதை அறிந்த பொதுமக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: