15 ஆயிரம் தொட்டிகளில் நாற்று நடவும் பணி தீவிரம்

ஊட்டி, ஜன.18: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்காக 15 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடத்தப்படுகிறது.

 மலர் கண்காட்சியின் போது பூங்காவில் உள்ள அனைத்து செடிகளில் மலர் பூத்து குலுங்கும். மேலும், 15 ஆயிரம் மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு அவைகள் பல வடிவகங்களில் மாடங்களிலும், புல் மைதானத்தில் அலங்கரித்து வைக்கப்படும்.  இந்நிலையில், இந்த ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக தற்போது தாவரவியல் பூங்கா தயார் செயயப்பட்டு வருகிறது. இதற்காக, பூங்காவில் 5 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் மலர் கண்காட்சியின் போது அலங்கார பணிகளை மேற்கொள்வதற்காக 15 ஆயிரம் ெதாட்டிகளில் மலர் செடிகள் நடவு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, தற்போது தொட்டிகளில் உரம் கலந்த மண் நிரப்பும் பணிகள் துவங்கியுள்ளது. நாள் தோறும் பல ஆயிரம் தொட்டிகளில் மண் நிரப்பப்பட்டு, அதில் நாற்று நடவு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் மலர்கள் பூத்தவுடன் தொட்டிகள் மாடங்களிலும், புல் மைதானத்திலும் அலங்கரித்து வைக்கப்படும்.

Related Stories: