கோபி அருகே நவகிணறு மாதையன் கோயிலில் பொங்கல் திருவிழா

கோபி, ஜன.18:கோபி அருகே நவகிணறு மாதையன் கோயிலில் பொங்கல் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோபி அருகே உள்ள பங்களாபுதூர் வன பகுதிக்குட்பட்ட துறையம்பாளையம் பகுதியில் நவகிணறு மாதையன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் தினத்தன்று குண்டம் திருவிழா நடப்பது வழக்கம். இந்த கோயிலுக்கு கணக்கம்பாளையம், துறையம்பாளையம், பகவதிநகர், புளியம்பட்டி, இந்திராநகர், பங்களாபுதூர், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்துவதோடு, ஆடு, மாடு, பாம்பு உள்ளிட்ட விலங்குகளின் களிமண் உருவபொம்மையை வைத்து வழிபாடு செய்வார்கள். இதுபோன்ற உருவபொம்மையை வைத்து வழிபாடு நடத்தினால் கால்நடைகளுக்கு நோய் தாக்காது என்றும், பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்களால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு ஏற்படாது என்பது பொதுமக்களின் நீண்ட கால நம்பிக்கை.அதன்படி, இந்தாண்டு நடந்த பொங்கல் விழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் களிமண் பொம்மைகளை சுமார் 5 கி.மீ. தூரம் சுமந்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இந்த ஆண்டு வன பகுதியில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதிக்குள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனத்தில் செல்லவும் வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால், கோயிலுக்கு பக்தர்கள் வேன் மற்றும் லாரிகளில் செல்லும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பங்களாபுதுர் வனத்துறையினர் கூறுகையில்,`இந்த வன பகுதி புலிகள் சரணாயலமாக இருப்பதால் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதே நேரத்தில் வன விலங்குகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளதால், வன விலங்குகளால் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்ட்டு விடக்கூடாது என்பதற்காகதான்  நடந்து செல்லவும், இருசக்கர வாகனத்தில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோயில்  திருவிழாவிற்கு வனத்துறை சார்பில் எவ்வித தடையும் இல்லை’

என்றனர்.

Related Stories: