ஊதியூரில் பூட்டிக்கிடக்கும் தங்கும் மண்டபம்

காங்கயம், ஜன. 18:காங்கயம் அடுத்துள்ள ஊதியூரில் பழனி பாதயாத்திரை செல்வோர் தங்க கட்டப்பட்ட மண்டபம் பூட்டிக்கிடப்பதால் முருக பக்தர்கள் அவதியடைந்துள்ளனர்.பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்ந்த பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபம், காங்கயம் தாராபுரம் மெயின்ரோட்டில், ஊதியூர் மலை அடிவார பகுதியில் அமைக்கப்பட்டது. சிவன்மலை கோயில் நிர்வாகம் சார்பில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ரூ.28,30,000 செலவில் அமைக்கப்பட்டது. தை மாத பூச விழாவிற்கு முருக பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து பழனி மலை சென்று வருகின்றனர். தினமும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து, இந்த வழியாக பழனிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். இவர்கள் வழியில் தங்கி இளைப்பாற ஊதியூர் மலை அடிவாரத்தில் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு, 2017ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.  இந்நிலையில் இந்த மண்டபம் கடந்த இரண்டு நாட்களாக  பூட்டிக்கிடப்பதால், பக்தர்கள் கடும் சிரமப்பட்டு சாலையோரத்தில் ஓய்வெடுத்து செல்கின்றனர்.  பக்தர்கள் இலவசமாக தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இந்த மண்டபத்தில் ஒரே நேரத்தில் 1000 பேர் வரை தங்கலாம் ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கும் தனித்தனியே  வசதி உள்ளது. இந்நிலையில் மண்டபத்தை பூட்டி வைத்து சிவன்மலை கோயில் நிர்வாகம் அலட்சியமாக இருப்பது, தங்களுக்கு வேதனையளிப்பதாக பழனி பாதயாத்திரை பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: