தொட்டியம் அருகே மழைவேண்டி அம்மாயி, தாத்தா வழிபாடு

தொட்டியம், ஜன.18: தொட்டியம் அருகே விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் கிராம மக்கள் ஒன்றுகூடி அம்மாயி, தாத்தா வழிபாடு நடத்தினர். திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த வரதராஜபுரத்தில் நேற்று மழைவேண்டி அம்மாயி, தாத்தா வினோத வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி முன்னதாக கிராம மக்கள் ஒன்றுகூடி முக்கிய வீதிகள் வழியாக முளைப்பாரி மற்றும் வழிபாட்டிற்குரிய பொருட்களை எடுத்துக்கொண்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர் பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோர் காவிரி ஆற்றில் ஒன்று சேர்ந்தனர். அங்கு மணலால் 7 மணல் சிற்பங்களை உருவாக்கி அதற்கு பெண்கள் அணிந்திருந்த நகைகளை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து கிராம முக்கியஸ்தர்களால் தேர்வு செய்யப்பட்ட மூன்று சிறுமிகள் காவிரி ஆற்றில் புனித நீராடி மண்டியிட்டு நின்றனர். அவர்களை சுற்றி பெண்கள், சிறுமிகள் கும்மி அடித்து அம்மாயி, தாத்தா மற்றும் மாரியம்மனை அழைத்து பாட்டு பாடினர். அப்போது சிறுமிகளிடம் அம்மாயி, தாத்தா, மாரியம்மன்  என எழுதப்பட்டு மடித்து வைக்கப்பட்டிருந்த சீட்டுகள் தட்டில் வைத்து பூசாரி நீட்டினார். அருள் வந்து ஆடிய சிறுமிகள் பொதுமக்கள் வேண்டிக்கொண்டபடி குங்குமம், விபூதி உள்ளிட்ட சீட்டுகளை எடுத்து கொடுத்தனர். அதனை தொடர்ந்து மழை பொழிந்து ஊர் செழிக்கவும், கிராம மக்கள் நலமுடன் இருக்கவும், துணை இருப்பதாக அருள்வாக்கு கூறினர். பூஜைகளின் முடிவில் பொதுவில் சமைக்கப்பட்ட உணவு பொட்டலங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதுகுறித்து பிரபு என்பவர் கூறும்போது, விவசாயம் செழிக்கவும், கிராம மக்கள் நோய் நொடியின்றி நலமுடன் வாழவும், மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் வருடம் தோறும் அம்மாயி, தாத்தா வழிபாடு கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறோம். இந்த வழிபாட்டின் மூலம் கிராம மக்களுக்கிடையே ஒற்றுமை, நீர்நிலைகளை பாதுகாத்தல், கருத்து வேறுபாடின்றி ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற கருத்தை இளைய தலைமுறைக்கும் கற்றுக்கொடுக்கும் வகையில் விழா நடத்துகிறோம் என்று கூறினார். வழிபாட்டின் முடிவில் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் காவிரி ஆற்று மணலில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் உணவருந்தி சென்றனர். நுண்ணீர்பாசனம், இதர திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம்

Related Stories: