திருவாரூரில் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்

திருவாரூர், ஜன.18:   காணும் பொங்கலையொட்டி திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பெண்கள் கிராமப்புற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கடந்த 15ம்தேதி  கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மாட்டுப்பொங்கலானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று காணும் பொங்கலையொட்டி பல்வேறு இடங்களில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்படி திருவாரூரில் ஆருரான் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் 36ம் ஆண்டு விளையாட்டு விழாவாக நீச்சல் போட்டி, சைக்கிள் போட்டி, ஓட்டப்பந்தயம், கோலப்போட்டி, மாறுவேட போட்டி, இசை நாற்காலி போட்டி உட்பட பல்வேறு போட்டிகள்  நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அதன் தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். மேலும் இந்த போட்டிகளையொட்டி நகரின் 4 வீதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் வளாகம்  உட்பட பல்வேறு கோயில்கள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் கூடிய நிலையில் இவர்கள் சில்கோடு, கண்ணாமூச்சி, ஓட்டப்பந்தயம் உட்பட பல்வேறு கிராமப்புற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். மாவட்டம் முழுவதும் எஸ்.பி துரை மேற்பார்வையில் 7 டிஎஸ்பிக்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: