முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

முத்துப்பேட்டை, ஜன.18:   முத்துப்பேட்டை அருகே ஜாம்புவாேனோடை தர்காவில் நேற்று அதிகாலை சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் உள்பட அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டனர்.

 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்கா புகழ் பெற்றதாகும். இந்த தர்காவில் பெரிய கந்தூரி விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டின் 717வது பெரிய கந்தூரி விழா கடந்த 7ம் தேதி அன்று துவங்கியது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. முக்கிய நாளான நேற்று அதிகாலை புனித சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம்  இரவு 10.30 மணிக்கு தர்ஹா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாகிப் இல்லத்தில் வைக்கப்பட்ட சந்தனங்கள் நிரப்பிய குடங்களை தர்காவிற்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி சிறப்பு பிராத்தனையுடன் நடைபெற்றது. நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து 2.30 மணிக்கு தர்கா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாகிப் தலைமையில் டிரஸ்டிகள் புனித சந்தன குடம் தலையில் சுமந்து வந்து கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைத்து அதிர்வேட்டுகள், வாணவேடிக்கை மேள தாளங்களுடன் சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கியது.  சந்தனக்கூடு ஊர்வலம் அடக்கஸ்தலம் சென்று பின்னர் ஆற்றங்கரை பாவா தர்கா, அம்மா தர்ஹா பகுதிக்கு சென்று மீண்டும் தர்காவை 3 முறை சுற்றி வந்தடைந்தது. அப்போது அனைத்து தரப்பினர்  பூக்களை சந்தனக்கூடு மீது வீசி பிரார்த்தனை செய்தனர். அதிகாலை 5 மணிக்கு சந்தனக்கூட்டிலிருந்து சந்தன குடங்கள் தர்காவிற்கு எடுத்து வரப்பட்டு ஆண்டவர் சமாதிக்கு புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டனர். முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிகோதிவ்யன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள்  ராஜேஷ், சுப்பிரியா, எஸ்ஐ கணபதி  உட்பட நூற்றுக்கணக்கான  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, நாகூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

Related Stories: