அரசு மாணவர் விடுதியில் தங்கி படித்தவர்கள்கூட்டமைப்பு உருவாக்கி சமூக சேவையற்ற முடிவு

மன்னார்குடி, ஜன.18:   மன்னார்குடி அரசினர் மாணவர் விடுதியில் 1973-81ல் தங்கி படித்த பழைய மாணவர்கள் 38 வருடங்களுக்கு பின்னர் ஒன்றுகூடி தங்களின் விடுதி காப்பாளருக்கு விழா எடுத்து கவுரவித்தனர்.

 மன்னார்குடி அரசினர் மாணவர் விடுதியில் 1973 முதல் 81 வரை தங்கி படித்த சுமார் 150 மாணவர்கள் ஒன்று சேர்ந்து அப்போது தங்களுக்கு கிடைத்த கல்வி, வேலைவாய்ப்பு, வசதி உள்ளிட்ட அனைத்தும் தற்போது படிக்கும் மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் அதனை கொண்டு சேர்க்கும் முயற்சியாக மன்னை மேனாள் விடுதி வாழ் மாணவர்கள் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். விழாவிற்கு கூட்டமைப்பின் முதன்மை அமைப்பாளர் மணவாளன் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் தங்கதமிழழகன் வரவேற்றார். பேராசிரியர் தமிழ்மாறன் முன்னிலை வகித்தார். அப்போதைய விடுதி காப்பாளர் கேசவமூர்த்திக்கு நல்மேய்ப்பன் விருது, தங்க மோதிரம் ஆகியவற்றை வழங்கினர். அப்போதைய விடுதி காவலர் கணேசனுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து கருத்தரங்கம் நடந்தது. வங்கி அலுவலர் பூபதி, எல்ஐசி கிளை மேலாளர் மதியழகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.   

 விழாவில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கிராமங்களில் ஏழை மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியளிப்பது, நூலகங்களை அமைத்து தருவது, அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துவது, பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்து அவர்களுக்கு உரிய பயிற்சிகள், வேலைவாய்ப்புகளை பெற்று தருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைமையாசிரியர் சவுந்தர்ராஜன் நன்றி கூறினார். 

Related Stories: