மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவாரூரில் இன்று சைக்கிள் பேரணி திமுக, கூட்டணி கட்சியினர் பங்கேற்பு

திருவாரூர், ஜன.18:   மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவாரூரில் இன்று 25 கி.மீ தூரத்திற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெறுகிறது. திருவாரூர், நாகை மற்றும் தஞ்சை உட்பட டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் விவசாய நிலங்களில் பதிக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாய்களில் அடிக்கடி கசிவு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் பலரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மீத்தேன் மற்றும் சேல் கேஸ் போன்றவைகளை எடுப்பதற்கு முயற்சித்து வந்த மத்திய அரசை கண்டித்து ஏற்கனவே விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இதனை கண்டு கொள்ளாமல் தற்போது ஹைட்ரோகார்பன் என்ற பெயரில் சேல் கேஸ்  மற்றும் மீத்தேன்  கேஸ் எடுப்பதற்கு தனியார் நிறுவனத்திற்கும், ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கும் மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் ஊராட்சியில் இதுபோன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடந்த 14ம் தேதி திருவாரூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவினை கண்டித்து திருக்காரவாசல் ஊராட்சி முழுவதும் உள்ள 400க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 15ம் தேதி பொங்கல் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து தங்கள் வீடுகள் முன்பாக கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அன்றைய தினம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பட்டமும்  நடைபெற்றது.  இந்நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் 2வது போராட்டமாக இன்று சைக்கிள் பேரணி நடைபெறுகிறது. இதில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுவதை கண்டித்தும், மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்தும் இதற்கு  துணை போகும் தமிழக அரசை கண்டித்தும் இந்த பேரணியானது நடைபெறுகிறது. அதன்படி திருக்காரவாசல் கிராமத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் தலைமையில் காலை 10 மணியளவில் துவங்கும் இந்த பேரணியானது மாவூர், திருநெய்பேர், மாங்குடி, கூடூர் மற்றும் திருவாரூர் வழியாக 25 கி.மீ பயணமாக கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைகிறது. இதில் மாவட்ட செயலாளர்கள் சுந்தரமுர்த்தி (மார்க்ஸ்ட் கம்யூ.), சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.) மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொள்கின்றனர்.

Related Stories: