இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்துக்கு பணிமாற்றம் செய்வதை கண்டித்து ஜாக்டோ, ஜியோ ஆர்ப்பாட்டம் இன்று நடக்கிறது

பெரம்பலூர், ஜன.18: பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அங்கன்வாடி மையங்களை எல்கேஜி, யுகேஜி  வகுப்புகளாக்கி அதற்கு இடைநிலை ஆசிரியர்களை கட்டாய பணிமாறுதல் செய்யும்  பள்ளி கல்வித்துறையின் செயலை கண்டிப்பது. பள்ளிகள் இணைப்பு, அங்கன்வாடி  பணி, ஊதிய முரண்பாடு, புதிய பென்ஷன் திட்டம், நிலுவைத்தொகை, அரசு அடிப்படை  வாழ்வாதார கோரிக்கைகளை கண்டு கொள்ளாதது, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்  பணியிடத்தை அழித்து உயர்நிலை மேல்நிலை பள்ளிகளோடு இணைப்பது என்று தொடக்க  கல்வித்துறைக்கு மூடுவிழா நடத்த முடிவு செய்து செயல்படுத்தி வருவதை  கண்டித்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன் இன்று (18ம் தேதி) மாலை 5 மணிக்கு ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தயாளன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அருள்ஜோதி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கவியரசன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ராமர் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மகேந்திரன் கண்டன உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: