விபத்துகளை தவிர்க்க டிரைவர்களுக்கு இரவில் டீ வழங்கும் போலீசார்

ஜெயங்கொண்டம், ஜன.18: விபத்துகளை தடுப்பதற்கு புதிய முயற்சியாக ஜெயங்கொண்டம் பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் வாகன டிரைவர்களுக்கு டீயை போலீசார் வழங்கி வருகின்றனர்.ஜெயங்கொண்டம் பகுதியில் இரவு நேரத்தில் நடைபெறும் விபத்துகளை தவிர்க்க அரியலூர் எஸ்பி சீனிவாசன் உத்தரவின்படி போலீசார் புதிய முறையை கையாண்டு வருகின்றனர். அதன்படி நள்ளிரவு நேரத்தில் நீண்ட தூரம் செல்லும் வாகனங்களை நிறுத்தி டிரைவர்களுக்கு தேநீர் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கும்பகோணம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதனத்தூர் கொள்ளிடம் ஆற்று பாலம் அருகில் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் வேலுசாமி தலைமையிலான போலீசார் நின்று அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தினர். பின்னர் லாரி, பேருந்து, மினி லாரி உள்ளிட்ட இலகுரக, கனரக வாகன டிரைவர்களுக்கு டீ வழங்கினர். இவ்வாறு வழங்குவதால் விபத்துகளை தவிர்க்க முடியும். ஓரளவு உயிர்ப்பலியை தடுக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: