உலமாக்கள், இதர பணியாளர் நலவாரியம் சார்பில் நலத்திட்ட உதவி, ஓய்வூதியம் பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர், ஜன.18: சிறுபான்மையினர் நலத்துறையின்கீழ் இயங்கும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நலவாரியம் மூலம் நலத்திட்ட உதவி மற்றும் ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நலவாரியம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இதன்மூலம் பள்ளிவாசல், தர்காக்கள், மதரஸாக்களில் பணிபுரியும் 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இந்த நலவாரியத்தால் உறுப்பினராக பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான உலமா அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. உலமா நலவாரிய அட்டை பெற்ற உறுப்பினர்கள் தங்கள் பதிவை 3 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் தொடர்ச்சியாக புதுப்பித்து கொள்ள வேண்டும். உலமா அடையாள அட்டை பெற்ற உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து நிவாரணம், மூக்கு கண்ணாடி ஈடுசெய்ய உதவித்தொகை ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நலவாரிய உறுப்பினர்கள் 60 வயது பூர்த்தியடைந்தவுடன் உலமா ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பித்து உலமா அட்டைகளை கட்டணமின்றி பெற்று கொள்ளலாம். ஓய்திவூதியம் பெறவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பெரம்பலூர் கலெக்டர் சாந்தா  தெரிவித்துள்ளார்.

Related Stories: