கிருஷ்ணகிரி பகுதியில் காணும் பொங்கல் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.18:  கிருஷ்ணகிரி பகுதியில் காணும் பொங்கலை பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், காணும் பொங்கலை பொதுமக்கள் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடினர். கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகிய இடங்களில் நேற்று காலை முதலே குடும்பம், குடும்பமாக குவியத் தொடங்கினர். கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், வேப்பனஹள்ளி, ஓசூர் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் குடும்பத்தினருடன் அணை பூங்கா, சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லத்திற்கு வந்தனர். அங்கு பூங்காவில் உள்ள ஊஞ்சல், சருக்கு பலகை போன்றவற்றில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் உற்சாகத்துடன் விளையாடி மகிழ்ந்தனர். பெரும்பாலானோர் படகு சவாரியிலும் ஈடுபட்டனர்.

காணும் பொங்கலையொட்டி, கிருஷ்ணகிரி அணை மற்றும் அணையின் மேற்பகுதியில் ஏராளமான மீன் கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு கூட்டம் அலைமோதியது. கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கோலப்போட்டி, பானை உடைத்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, வழுக்கு மரம் ஏறுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் பெண்கள் காலை முதலே தங்கள் வீட்டு வாசலில் பெரிய அளவிலான கோலமிட்டு, வண்ண பொடிகளை தூவி அழகுபடுத்தினர். மேலும், பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள், 25 ஆயிரத்திற்கு அதிகமான கோழிகள் பலியிடப்பட்டது. பலியிடப்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகளை சமைத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விருந்தளித்தனர். அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடும் இடங்களில், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க மாவட்ட எஸ்.பி. பண்டிகங்காதர் உத்தரவின்பேரில், ஏராளமான போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  

Related Stories: