ஓசூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மூலிகை தோட்டம் பராமரிப்பு

ஓசூர், ஜன.18: ஓசூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மையம் பராமரிப்பில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ மையத்தின் நுழைவு வாயிலில் மண் தொட்டிகளில் பல்வேறு மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு வந்தன. தற்போது, அரசு மருத்துவமனை வளாகத்தில் வலது புறமாக இடம் ஒதுக்கப்பட்டு மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூலிகை தோடத்தில் சர்க்கரை நோய், அதிக உடல் எடை ஆகியவற்றை போக்கும் இன்சுலின் செடி உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது. மேலும், மூட்டுவலி மற்றும் தசைவலி ஆகிய நோய்களை குணப்படுத்தும் முடக்கறுத்தான், சிறுநீரக நோய்கள், ஒவ்வாமை ஆகியவற்றை குணப்படுத்தும் விஷப்பச்சிலை, மூட்டுவலி வாதம் போக்கும் நாகதாளி, இரைப்பு, இருமல், சளி ஆகியவற்றை குணப்படுத்தும் சிறுநீற்றுப்பச்சிலை, தோல் நோய், வயிற்றுப்புண், மகளிர் நோய்களை குணப்படுத்தும் சோத்து கற்றாழை, தோல் நோய்கள், புண், ஆகியவற்றை குணப்படுத்தும் இலைகன்னி உள்ளிட்டவை 50க்கும் மேற்பட்ட மருத்துவ குணமுடைய மூலிகை செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மூலிகை தோட்டத்தை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். மேலும், அதன் பயன்களை கேட்டு அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். ஆக மொத்தம் இந்த மூலிகை தோட்டமானது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளதாக தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பூபதி தெரிவித்தார். துகுறித்து அவர் கூறியதாவது: ஓசூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. மூலிகை செடிகளின் பெயர்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: