குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு அபாயம்

ஓசூர், ஜன.18:  ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கும் நிலையில், முறையாக குப்பைத்தொட்டிகள் வைக்கப்படாத நிலை காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு அபாயம் ஏறப்ட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குப்பை தொட்டிகள் முறையாக அமைக்கப்படாத நிலை காணப்படுகிறது. இதனால், குப்பை கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்பட்டு வருகிறது. அதனை ஆடு-மாடுகள், கோழிகள் மற்றும் நாய்கள் கிளறி விடுவதால் வாகன  ஓட்டிகளுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் மிகுந்த இடையூறாக உள்ளது. மேலும், பழைய சாம்பர்-சாதம், சட்னி உள்ளிட்ட பழைய உணவுகளையும் பொட்டலம் கட்டி எடுத்து வந்து வீசி செல்கின்றனர். இந்த பொட்டலங்களை தெருவெங்கும் நாய்கள் இழுத்தவாறு செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு அபாயம் உருவாகியுள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள மைதானத்தில் கோழி கழிவுகளை ஏற்றி வந்து இரவு நேரத்தில் கொட்டி விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே, குப்பை தொட்டிகளை வைத்து முறையாக கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்குள்ள மைதானத்தில் கோழி கழிவுகள் கொட்டப்படுவதையும் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: