காரைக்காலில் பாரம்பரிய பொங்கல் கலை விழா

காரைக்கால், ஜன.18: காரைக்கால் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து, மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் கலைபண்பாட்டுத்துறை இணைந்து, நெடுங்காடு குரும்பகரம் பகுதியில் நேற்று பாரம்பரிய பொங்கல் கலைவிழாவை விமரிசையாக நடத்தியது.காணும் பொங்கலையொட்டி நடைபெற்ற இவ்விழாவை, புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் திருமலைராயன்பட்டினம் எம்எல்ஏ கீதா ஆனந்தன், கலெக்டர் கேசவன், சார்பு கலெக்டர் விக்ராந்த்ராஜா, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் காளிதாசன், நகராட்சி ஆணையர் சுபாஷ், போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், முதன்மை கல்வி அதிகாரி அல்லி, உள்ளாட்சித்துறை துணை இயக்குனர் பாஸ்கரன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, பாரம்பரிய கலைகளான சாலையோர கிராமிய கலை நிகழ்ச்சி, மாட்டு வண்டி ஊர்வலம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தமிழர்களின் பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் நெல் கோட்டை, அகப்பை, பழங்கால கடிகாரம், பழங்கால அரிக்கேன் விளக்கு, சுவரொட்டி விளக்கு, ஓலைச்சுவடி, பழங்கால நாணயங்கள், உரல், உலக்கை, நெல் அளக்கு, மாடுகளின் கழுத்துச் சலங்கை, நெட்டிமாலை, செப்பு சாமான்கள், கிராமபோன் தட்டு, கெட்டிகால், குத்து குழா, பரை உள்ளிட்ட பல அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, பெண்களுக்கான கோலப்போட்டி, பாரம்பரிய உணவு வகைகளின் சமையல் போட்டி, ஆண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. இறுதியில்,  போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் அமைச்சர் கமலக்கண்ணன் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். விழாவில், அமைச்சர் கமலக்கண்ணன், கலெக்டர் கேசவன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் காலிதாசன் மற்றும் பலர் வேஷ்டி சட்டையுடனும், பெண்கள் பலர் புடவை, பாவாடை, தாவணி உள்ளிட்ட பாரம்பரிய உடைகளோடு கலந்துகொண்டனர்.

Related Stories: