நகராட்சியில் திரும்பும் இடமெல்லாம் குப்பை குவியல்

விருதுநகர், ஜன.18: விருதுநகர் தெருக்களில் குவியும் குப்பைகள் அகற்றப்படாமல் கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. ஆணையர் பணியிடம் காலியாக இருக்கும் நிலையில் பொறுப்பு ஆணையரும் கண்டுகொள்ளாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விருதுநகர் நகராட்சியின் 36 வார்டுகளில் 80 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். தினசரி 41 டன் குப்பைகள் தெருக்களில் குவிந்து வருகின்றன. குப்பைகளை அகற்ற 245 துப்புரவு பணியாளர்கள் இருந்த நகராட்சியில் தற்போது 95 நிரந்தர மற்றும் 47 தினக்கூலி பணியாளர் கள் மட்டும் உள்ளனர்.

மக்கள் குப்பைகளை போட தெருக்களில் குப்பை தொட்டிகள் இல்லை. துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை எடுத்து வாகனங்களில் போட மண்வெட்டி, தட்டு உள்ளிட்ட உபகரணங்கள் இல்லை. தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக கையுறை, காலுறையும் வழங்கவில்லை. குப்பைகளை எடுத்து செல்ல மினி வேன்கள் மட்டும் இருக்கும் நிலையில் லாரிகள் இல்லாத நிலை தொடர்கிறது.இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துப்புரவு தொழிலாளர்கள் விடுமுறையால், நகரில் தேசபந்து மைதானம், பாவாலி ரோடு, புல்லாக்கோட்டை ரோடு, தெப்பம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

தேசபந்து மைதானத்தில் கரும்பு விற்பனை நடைபெற்றது. எனவே கரும்பு தோகைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகளை நகராட்சி அகற்றுவதா, விற்பனையாளர்கள் அகற்றுவதா, ஒப்பந்தகாரர் அகற்றுவதா என்ற பிரச்சனை இருக்கிறது. எனவே குப்பைகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன. நகராட்சியை நிர்வாகம் செய்ய வேண்டிய ஆணையர் பணியிடம் காலியாக இருக்கும் நிலையில், கோவில்பட்டி நகராட்சி ஆணையர் பொறுப்பில் நிர்வாகம் நடைபெறுகிறது. பொறுப்பு ஆணையரும் வாரம் சில மணி நேரம் மட்டும் வந்து செல்வதால், முழுமையாக நிர்வாகம் நடைபெறவில்லை.

திரும்பிய பக்கம் எல்லாம் குப்பைகள் குவிந்து கிடப்பதால், நகரமே குப்பை காடாக கிடக்கிறது. நிரந்தர ஆணையர் நியமனம் செய்யவும், நகரில் குப்பைகளை முறையாக அகற்றவும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: