வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வறண்டு கிடக்கும் 800 கண்மாய்கள்

விருதுநகர், ஜன.18:  வடகிழக்கு பருவமழை 30 சதவீதம் குறைவாக பெய்ததால் 800 கண்மாய்கள் சொட்டு தண்ணீரின்றி காய்ந்து கிடக்கின்றன. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நிலவுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் சராசரி மழையளவு 820.10 மி.மீ. குளிர்காலத்தில் பெய்ய வேண்டிய 42.8 மி.மீக்கு பதில் 29.10 மி.மீ மழையே பதிவானது. கோடையில் பெய்ய வேண்டிய 161.5 மி.மீக்கு பதில் 234.89 மி.மீ மழை பதிவானது. தென்மேற்கு பருவமழையின் போது பெய்ய வேண்டிய  196.8 மி.மீக்கு 236.05 மி.மீ மழை பதிவானது. வடகிழக்கு பருவ மழையின் போது  419 மி.மீ பெய்ய வேண்டிய நிலையில் 294.57 மி.மீ மழை பதிவாகி உள்ளது. ஆண்டு சராசரி மழையான 820.10 மி.மீ பதில் 794.61 மி.மீ மழை பதிவாகி உள்ளது. சராசரியை விட 25.49 மி.மீ மழை குறைவாக பெய்துள்ளது. கோடை மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் சராசரியை விட கூடுதலாக பெய்துள்ளது. மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது 85 சதவீத விவசாயம் நடைபெறும் நிலையில் சராசரியை விட குறைவாக பெய்ததால் விவசாயம் பாதிக்கப்படைந்துள்ளது. 1.35 லட்சம் எக்டேரில் விவசாயம் நடைபெற வேண்டிய நிலையில் 80 ஆயிரம் எக்டேரில் மட்டும் விவசாயம் நடைபெற்றது. இதிலும் சுமார் 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம் படைப்புழுவால் முழு சேதம் அடைந்து விவசாயிகள் பாதிப்பில் உள்ளனர்.வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் மாவட்டத்தில் உள்ள 1024 கண்மாய்களில் 800 கண்மாய்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. 18 கண்மாய்களில் 2 மாதத்திற்கான தண்ணீரும், 52 கண்மாய்களில் 1 மாதத்திற்கான தண்ணீரும், 154 கண்மாய்களில் ஒரு மாதத்திற்கு குறைவான தண்ணீரும் உள்ளன. மாவட்டத்தில் உள்ள அணைகளில், பெரியார் அணையின் 45 அடி கொள்ளளவில் 15 அடியும், கோவிலாறு அணையின் 40 அடி கொள்ளளவில் 3 அடியும், வெம்பக்கோட்டை அணையின் 21 அடி கொள்ளளவில் 8 அடியும், கோவிலாறு அணையின் 16 அடி கொள்ளளவில் 5 அடியும், குல்லூர் சந்தை அணையின் 7 அடி கொள்ளளவில் 6 அடியும், இருக்கன்குடி அணையின் 20 அடி கொள்ளளவில் 3 அடியும் தண்ணீர் உள்ளன. 30 அடி கொள்ளளவு உடைய சாஸ்தா கோவில் அணை தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றது.கண்மாய்களும், அணைகளும் வறண்டு கிடக்கும் நிலையில் மாவட்டத்தில் உள்ள 35,193 கிணறுகளில் ஒரு மணி நேரம் பாசனத்திற்கான தண்ணீர் மட்டும் உள்ளது. நிலத்தடி நீர் மட்டமும் பல இடங்களில் 200 அடிக்கு கீழ் சென்று விட்டதால், வரும் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: