மூணாறு அருகே இரட்டை கொலையில் தம்பதியர் கைது

மூணாறு, ஜன.18:மூணாறில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கொலையாளிக்கு உதவியதாக சாந்தம்பாறை பகுதியை சேர்ந்த தம்பதிகள் இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் மேலும் விடுதியில் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த ஜேக்கப் வர்கீஸ் (44). இவருக்கு மூணாறு சின்னக்கானல் நடுப்பறை பகுதியில் ஏலத்தோட்டம் மற்றும் அதனுடன் சேர்ந்து சொகுசு விடுதியும் உள்ளது. இந்த விடுதியில் ஜேக்கப் வர்கீஸும், சின்னக்கானல் பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்த முத்தையாவும் (55) ஜன.12ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.இக்கொலைகளை விடுதி மற்றும் ஏலத்தோட்டம் மேற்பார்வையாளராக பணியாற்றிய இடுக்கி மாவட்டம் குருவிலசிட்டி பகுதியை சேர்ந்த போபின் செய்ததுடன், ஜேக்கப் வர்கீசின் கார் மற்றும் 1.5 லட்சம் மதிப்பிலான ஏலக்காய் ஆகியவற்றுடன் தலைமறைவானதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இந்த வழக்கை விசாரிக்க மூணாறு டிஎஸ்பி சுனிஸ்பாபு தலைமையில் இரண்டு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கொலை செய்யப்பட்ட இருவரது உடல்கூறு பரிசோதனையில் ஜேக்கப் வர்கீஸ் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாகவும், முத்தையா ஆயுதங்களால் அடித்து கொல்லப்பட்டதாகவும் தெரியவந்தது. மேலும் ஜேக்கப் மார்பில் பாய்ந்த குண்டு உடலை துளைத்து மறுபுறம் வெளிவந்துள்ளது தெரியவந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்தபோது போபினின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. இதற்காக நெடுங்கண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் போலின் சிகிச்சை பெற சாந்தம்பாறை சோரியாற்றைச் சேர்ந்த தம்பதியர் இமானுவேல், கபிலா உதவியதாக தெரிய வந்தது.

இவர்களுக்கு ஏலக்காய் விற்ற பணத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் கொடுத்தும் விசாரணையில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் தம்பதியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதியில் இருந்து 2 நாட்டுதுப்பாக்கிகளை பறிமுதல் செய்து உள்ளனர். கொலையாளி போபினின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார், கேரள மாநிலம் வயநாட்டில் பதுக்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: