திருப்பூர் - கோவை செல்லும் பயணிகளால் திணறியது தேனி புதிய பஸ்ஸ்டாண்டு

தேனி, ஜன. 18: பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில் கோவை, திருப்பூர் நகரங்களுக்குச் செல்ல பயணிகள் தேனி பஸ் நிலையத்தில் திரண்டதால் பஸ்நிலையமே திணறியது.தேனி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். எனவே தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏழை, எளியோர் தொழில் தேவைக்காக திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கு பெருமளவில் இடம் பெயர்ந்துள்ளனர். திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற நகரங்களில் குடும்பத்துடன் தங்கி பணிபுரியும் தேனி மாவட்டத்தினர் தீபாவளி, பொங்கல் பண்டிகை விழாக்களின் போது, சொந்த மாவட்டத்திற்கு வருவதை வாடிக்கையாக்கி உள்ளனர்.

இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை செவ்வாய்கிழமை என்றாலும், கடந்த சனிக்கிழமை முதல் நேற்று வரை விடுமுறை விடப்பட்டதால் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் கடந்த சனிக்கிழமையே தேனி மாவட்டம் வந்தனர். நேற்றுடன் பொங்கல்விடுமுறை முடிவடைவதால் சொந்த மாவட்டம் வந்தவர்கள் மீண்டும் தொழில் புரிவதற்காக திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கு நேற்று கிளம்பினர்.இதன் காரணமாக தேனி புதிய பஸ்நிலையத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் கூட்டத்தால் பஸ் நிலையமே திணறியது. நேற்று காலை முதல் பஸ்சுக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகம் இருந்ததால் இவ்வழித்தடங்களுக்கு செல்லும் பஸ்கள் வரும்போது, விபத்து அச்சமின்றி பயணிகள் ஓடோடி சென்று சீட்டு பிடித்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு பண்டிகை தினத்தின்போது, இவ்வழித்தடத்திற்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தாலும், வழக்கம்போலவே பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் லக்கேஜ் மற்றும் குழந்தைகளுடன் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Related Stories: