தேனி பங்களாமேடு பகுதி ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

தேனி, ஜன. 18: தேனி நகரில் பங்களாமேடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.தேனி நகர் மதுரை ரோடு வர்த்தகம் மிகுந்த பகுதியாக உள்ளது. இச்சாலையில் பிரபல ஜவுளி கடைகள், பேன்சிகடைகள், பல்வேறு பொருள்களுக்கான வணிக கடைகள் மிகுந்துள்ளன. இதனால் இச்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. சாலையின் இருபுறமும் வணிக கடைகள் உள்ளதால் இக்கடைகளுக்கு மோட்டார் சைக்கிளில் வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை சாலையோரம் நிறுத்திச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.இச்சாலையில் பங்களாமேடு முதல் அரண்மனைப்புதூர் ரயில்வே கேட் வரை சாலையின் இருபுறமும் மோட்டார் ஒர்க்ஷாப்புகள், மரக்கடைகள், டீக்கடைகள், உணவு விடுதிகள் என பல வணிக ரீதியான கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளன. மிகக் குறுகிய இச்சாலையில் விரைந்து வரும் கனரக வாகனங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து வருகிறது. விபத்தைத் தடுக்க இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: