சிவகங்கை, காளையார்கோவில் பகுதியில் குண்டும் குழியுமாய் கிராமச்சாலைகள்

சிவகங்கை, ஜன. 18: சிவகங்கை மற்றும் காளையார்கோவில் ஒன்றிய பகுதிகளில் கிராமச்சாலைகள் கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத நிலையில் குண்டும், குழியுமாய் காணப்படுகின்றன. சிவகங்கை மற்றும் காளையார்கோவில் ஒன்றியத்தில் 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகள், மாவட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமச் சாலைகள் உள்ளன. கிராமங்களில் உள்ள தெருக்களில் சிறிய அளவிலான சாலைகளை மட்டுமே ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்படும். பஸ் போக்குவரத்து உள்ள சாலைகள் அல்லது 500 மீட்டருக்கு மேல் நீளமுள்ள சாலைகள் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை, யூனியன் நிர்வாகம் சார்பில் அமைக்கப்படும்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள தெருக்களில் சிமென்ட் சாலைகள் போடப்பட்டன. சிமென்ட் சாலை போடப்பட்ட இடங்களில் சில மாதங்களிலேயே கற்கள் நீட்டிய நிலையில் வாகனங்களிலோ அல்லது நடந்து கூட செல்ல முடியாத நிலையில் சிதைந்துள்ளன. கிராமப்பகுதிகளுக்கு பஸ்கள் செல்லும் சாலைகளும் பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாத நிலையில் கடுமையாக சேதமடைந்துள்ளன.சிவகங்கை அருகே சூரக்குளம் வழி நாட்டரசன்கோட்டை செல்லும் சாலை, அல்லூர்-பனங்காடி சாலை, காட்டுக்குடியிருப்பு சாலை, திருமலை-மேலப்பூங்குடி சாலை, பில்லூர் சாலை, ஒக்கூர்புதூரில் இருந்து அண்ணா நகர் வழி இடையமேலூர் செல்லும் சாலைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.காளையார்கோவில் அருகே கண்டனிப்பட்டி-கருதுப்பட்டி சாலை, அழகாபுரி சாலை, ஒக்கூர்-குளக்கட்டப்பட்டி சாலை, மேலமங்கலம் சாலை உள்ளிட்டவைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. கிராமச்சாலைகள் கண்டுகொள்ளப்படாத நிலையில் இருப்பதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாக கிராமச்சாலைகள் புதிதாக அமைக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. சிமென்ட் சாலைகள் போடப்பட்ட இடங்கள் அனைத்தும் மிக மோசமாக சேதமடைந்து வாகனப் போக்குவரத்திற்கு தகுதியற்றதாய் உள்ளன. கிராமங்கள் வழியே பஸ் போக்குவரத்து இருந்த சாலைகளில் ஏராளமானவை சேதமடைந்ததால் பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்களில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சாலைகள் உள்ளிட்ட கட்டுமானப்பணிகளை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை. ஏற்கனவே உள்ள சாலைகளை குறைந்தபட்சம் பராமரிப்பு செய்யக்கூட நடவடிக்கை இல்லை. உடனடியாக புதிய சாலை போடவும், பராமரிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: