5 கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

காளையார்கோவில், ஜன. 18: காளையார்கோவில் அருகில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி கேட்டு 5 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு மாரந்தை, தெற்கு மாரந்தை, கோடிக்கரை, இலந்தக்கரை, கூத்தனி, கூத்தங்கரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிரமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.அப்பகுதியில் போதுமான போக்குவரத்து வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் தங்களின் அன்றாட தேவைகளான கல்வி, மருத்துவம், வியாபாரம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் 7 கி.மீ. நடந்து சென்று வேளாரேந்தல் விலக்கில் பஸ் ஏறவேண்டியுள்ளது. அங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள மறவமங்கலம் அல்லது 20 கி.மீ. தொலைவில் உள்ள காளையார்கோவிலுக்குச் செல்ல வேண்டும். தங்கள் கிராமங்களுக்கு பஸ் வசதி வேண்டும் என்று பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைக் கண்டித்து பகையஞ்சான் விலக்கில் 5 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் காரைக்குடி, பரமக்குடி மாநிலச்சாலையில்  நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காளையார்கோவில் போலீசார் மற்றும் வருவாய்த்தறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்றட்டது.

Related Stories: