கடல் ஆமை முட்டைகள் பாதுகாப்பு

சாயல்குடி, ஜன. 18: சாயல்குடி அருகே மாரியூர் கடற்கரையில் இனப்பெருக்கத்திற்காக கடல் ஆமையின் 376 முட்டைகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.மன்னார் வளைகுடா பகுதியாக கருதப்படும் தூத்துக்குடி மாவட்ட கடல் எல்லை முதல் ராமநாதபுரம் மாவட்டம் கடல் எல்லை வரை கடல் ஆமைகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. இவைகளின் இனப்பெருக்க காலமான டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரை மணல்களில் ஆமைகள் முட்டைகளை இட்டு செல்வது வழக்கம். இந்த கடல் ஆமை முட்டைகளை பாதுகாப்பதற்காக மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பாதுகாப்பு வனவர் போஸ்பாண்டி, வனக்காப்பாளர் ராஜ்குமார் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈஸ்வரன், பன்னீர்செல்வம், ராஜா ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு கடற்கரை கிராம இளைஞர்களுடன் ரோந்து சென்றனர்.சாயல்குடி அருகே உள்ள மாரியூர் காந்திநகர் கடற்கரை பகுதியில் 376 கடல் ஆமை முட்டைகளை கண்டறிந்தனர். இந்த முட்டைகளை பாதுகாப்பு நிறைந்த ஒப்பிலான் கடற்கரை மணலில் புதைத்து, வேலி அமைத்து பாதுகாத்து கண்காணித்து வருகின்றனர். சுமார் 45 நாட்கள் கழித்து முட்டையிலிருந்து வெளிவரும் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: