விடுமுறை நாட்களில் ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்பயணிகள் அவதி

ராமநாதபுரம், ஜன. 18: ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் தொடர் விடுமுறை நாட்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.  இடம் கிடைக்காமல் ரயில் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மதுரை, ராமேஸ்வரம் இடையே தினமும் காலை, நண்பகல், மாலை நேரங்களில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ராமேஸ்வரம், மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட நகர பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் சென்று திரும்புகின்றனர். பஸ் கட்டணத்தை விட ரயில்களில் குறைவான கட்டணம் என்பதால் ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக விடுமுறை நாட்களில் ரயில்களில் கூட்ட நெரிசலால் பயணிகள் நின்றுகூட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக போகி, பொங்கல், மாட்டு பொங்கல் என தொடர்ச்சியாக விடுமுறை இருந்தது. நேற்று திருவள்ளுவர் தினத்தையொட்டி விடுமுறை தொடர்ந்த நிலையில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிமாக இருந்தது. ஒரு சிலர்  டிக்கெட் எடுத்த பின்னரும் கூட்டம் காரணமாக ரயிலில் ஏற முடியவில்லை.  வேறு வழியில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி பஸ்களில் சென்றனர். பலர் பார்சல் ஏற்றும் ரயில் பெட்டிகளில் தொற்றியபடி சென்றனர்.

தொடர் விடுமுறை நாட்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில் ரயில்வே நிர்வாகத்தினர் மாற்று நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்க வில்லை. பயணிகளின் நலன் கருதி கூடுதல் ரயில்கள் இயக்காவிட்டாலும் தற்போது இயங்கி வரும் பயணிகள் ரயில்களில் விடுமுறை காலங்களில் மட்டும் கூடுதல் பெட்டிகள் இணைக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து பயணி செந்தில் கூறுகையில், ‘கட்டணம் குறைவு என்பதால் பயணிகள் ரயில் போக்குவரத்தை அதிகம் விரும்புகின்றனர். காலையில் மண்டபத்தில் புறப்படும் ரயிலில்  மண்டபம், உச்சிப்புளி பகுதியிலேயே பொதுமக்கள் அனைத்து பெட்டிகளிலும் முழுவதுமாக ஏறிவிடுதால் ரயில் ராமநாதபுரம் வரும்போது நிற்கக்கூட இடம் கிடைப்பதில்லை. இதே நிலைதான் மதுரையில் இருந்து புறப்படும் ரயிலுக்கும் உள்ளது. விடுமுறை காலங்களில் ரயில்வே நிர்வாகத்தினர் மாற்று நடவடிக்கை எடுத்து ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: