திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஜல்லிக்கட்டு 22 பேர் காயம்

கோபால்பட்டி, பழநி, ஜன. 18: பொங்கல் பண்டிகையையொட்டி சாணார்பட்டி அருகே நத்தம்மாடிபட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. திண்டுக்கல், திருச்சி, மணப்பாறை, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 350க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. ஊர்வழக்கப்படி முதலில் கோயில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறி வந்த காளைகளை வீரர்கள் ஆக்ரோஷத்துடன் அடக்கினர். சில காளைகள் வீரர்களுக்கு பிடிகொடுக்காமல் பாய்ந்து சென்றன. காளைகள் முட்டியதில் நத்தம் புதுக்கோட்டை ராஜேஷ், வத்திப்பட்டி அழகுராஜ்(25), கோபால்பட்டி ஆனந்தராஜ்(22). சிலுக்குவார்பட்டி ஜோசப்செல்வராஜ் (23), புகையிலைப்பட்டி தாமஸ்(19), பிச்சைமுத்து உட்பட 15 பேர் காயமடைந்தனர். பார்வையாளர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. அனைவருக்கும் மருத்துவக்குழுவினரால் அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறந்த காளைகளுக்கும், காளையர்களுக்கும் தங்கம், வெள்ளிக் காசு, வேட்டி, துண்டு உள்ளிட்டவை பரிசு பொருட்களாக வழங்கப்பட்டன. விழாவில் அசம்பாவிதத்தை தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து ஜல்லிக்கட்டை கண்டுரசித்தனர்.

பழநி அருகே பெரியகலையம்புத்தூர் பத்ரகாளியம்மன் கோயில் கமிட்டி சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. முதலில் கோயில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின் திண்டுக்கல், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 200க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சுமார் 200 வீரர்கள் சுழற்சி முறையில் களம் இறக்கப்பட்டனர். காளைகள் முட்டியதில் 7 பேர் லேசான காயமடைந்தனர். சிறந்த காளை, மாடுபிடி வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.இதேபோல் நத்தம், கொடைக்கானல் பகுதிகளில் மாடுகளை அலங்கரித்து மஞ்சுவிரட்டு போட்டி நடத்தினர்.

Related Stories: