தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

கன்னியாகுமரி, ஜன. 18: தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.கன்னியாகுமரி மாவட்ட பாஜ  இளைஞரணி நிர்வாகிகளுக்கான வீடியோ கான்பரன்சிங் கலந்துரையாடல் கன்னியாகுமரியில் நேற்று நடந்தது.பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கிறது. தேர்தல் கூட்டணி அமைப்பதில் தேசிய கட்சிகள் மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டில் பாஜ அரசு செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்து குமரி மாவட்ட பாஜ இளைஞரணி நிர்வாகிகளுடன், இளைஞரணி அகில இந்திய தலைவர் பூனம் மஹாஜன்  வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி மற்றும் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற நிகழ்ச்சி  கன்னியாகுமரியில் நேற்று நடந்தது.

இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:பாஜ இளைஞரணி சார்பில் இளைஞரணியின் அகில இந்திய தலைவர் பூனம் மஹாஜன் நேற்று அருணாச்சல பிரதேசத்தில் இருந்து வீடியோகான்பரன்சிங் முறையில் கட்சி நிர்வாகிகளுடன் பேசினார். தமிழகத்தில் கன்னியாகுமரியில் இளைஞரணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். மதுரையில் வரும் 27ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்டமான நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முக்கிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுகிறார். மேலும் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறார். தமிழகத்தில் எந்த கட்சியுடனும் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வில்லை. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாநில பாஜ மகளிரணி பொதுசெயலாளர் உமாரதி, மாவட்ட பாஜ தலைவர் முத்துகிருஷ்ணன், செயலாளர் விசு, மாவட்ட இளைஞரணி தலைவர் நீலேஷ், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் காயத்ரி பிரியதர்ஷினி, மீனாதேவ், கன்னியாகுமரி மண்டல தலைவர் சுடலைமணி உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: