மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு இனி பொது நல்லி கிடையாது

நாகர்கோவில், ஜன.18: தமிழகம் முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பை கட்டாயமாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கவும் சுற்றுச்சூழல் அவசியம் கருதியும் மத்திய அரசு அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பாதாள  சாக்கடை திட்டத்தை கட்டாயமாக்கி அறிவித்துள்ளது. படிப்படியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தும் போது, அதற்கேற்ப குடிநீர் மற்றும் தண்ணீர் வசதியும் ஏற்படுத்துவது அவசியம். எனவே இதற்கு ஏற்ப இரு திட்டங்களும் இணைத்தே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே தற்போது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி வித்தியாசமின்றி குடிநீரை அனைத்து உபயோகங்களுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் முறைகேடாக பொதுகுடிநீர் நல்லியில் டியூப்களை பொருத்தி தங்கள் வீடுகளுக்கு தண்ணீர் எடுக்கின்றனர். நகர்புறங்களில் தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் அமைத்து, அதனை அனைத்து உபயோகத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சீரான குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது.

இதற்கிடையே குடிநீர் கிணறுகள், குழாய்கள் பராமரிப்பு என செலவினங்கள் அதிகரிப்பால், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், அவர்கள் குடிநீர் விநியோகம் செய்யும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு கட்டணத்தை உயர்த்தி விட்டன. இனி ஆண்டிற்கு  குறிப்பிட்ட சதவீதம் உயர்த்தப்படும் என அறிவித்து விட்டது. இதுபோல் உள்ளாட்சிகள் நேரடியாக தண்ணீர் விநியோகம் செய்தாலும் குழாய், மோட்டார்கள் பராமரிப்பு, மின்கட்டணம், சுத்திகரிப்பு செலவு, பணியாளர்கள் சம்பளம் என செலவினமும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து நகராட்சி  மற்றும் பேரூராட்சிகள் நிர்வாக இயக்குநரும் பொதுமக்களிடம் குடிநீர் கட்டணத்தை ஆண்டு ேதாறும் உயர்த்த உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே தமிழக அரசு தற்போது மீண்டும் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, அனைத்து வீடுகளுக்கும், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புகளை சம்மந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் உடன் அமைக்க வேண்டும்.

அதன் பின்னர் இணைப்பு பெற்றவர்கள் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு கட்டணத்தை செலுத்தாவிட்டால் இணைப்பை துண்டிக்க வேண்டும்.  அனை த்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு அளித்த பின்னர்  பொது குடிநீர் குழாய்கள் அனைத்தும் துண்டிக்கப்படும். இதன்படி தற்போது நாகர்கோவில் நகராட்சியில் 83 ஆயிரம் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் உள்ளன. இவற்றிக்கு குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் (முதலில் திட்டம் வரும் வார்டு பகுதிகளில்) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் கூறினர். மேலும் தற்போது புத்தனாறு திட்டப்படி முற்றிலும் புதியதாக குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது. எனவே அப்போதே அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

சொத்து வரியுடன் 10 தவணைகளில் செலுத்தலாம்

அனைத்து வீடுகளுக்கும் பாதான சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ஆகும் செலவையும் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை  திட்ட மதிப்பீட்டில் சேர்க்க வேண்டும். மேலும், இணைப்புகளை வழங்கி விட்டு அதற்கான கட்டணத்தை சொத்து வரி செலுத்தும் போது அதனுடன் சேர்த்து 10 தவணைகளாக வசூலிக்கலாம். இதற்காக மாநகராட்சிகள் மற்றும் 234  நகராட்சிகளிலும் அவர்களின் உபசட்ட விதிகளில் (by laws) தேவையான திருத்தம் கொண்டு வரவேண்டும்.

குடிநீர் சிக்கனத்திற்காக டிஜிட்டல் மீட்டர்

தற்போது நாகர்கோவிலில் அதிகமானோர் தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் அமைத்துள்ளனர். வீட்டு இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்பட்டாலும், மீட்டர் ரீடிங் என்பது தமிழகத்தில் எங்கும் இதுவரை கணக்கிடப்படவில்லை. இதனால் தண்ணீர் குறைவாக எடுத்தாலும், மிக அதிகம் எடுத்தாலும், குறிப்பிட்ட கட்டணத்தை 3 மாதத்திற்கு ஒரு முறை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தினசரி தண்ணீர் தரும்போது, செலவினத்தை ஈடுகட்டவும், குடிநீர் சிக்கனத்தை  தானாக மக்களிடம் ஏற்படுத்தும் வகையில், நாகர்கோவில் நகராட்சியில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட உள்ளது. இதன்படி ஒரு மில்லி தண்ணீர் எடுத்தாலும், அது மீட்டரில் பதிவாகிவிடும்.  மின்வாரியம் போன்று ஒவ்வொருவரும், குடிநீர் பெற்றதற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். புத்தனாறு திட்டப்படி தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படும் போது, இந்த திட்டம் அமலில் இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.

Related Stories: