காணும்பொங்கலை கொண்டாடுவதற்காக பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரிக்கு தடையால் ஏமாற்றம்

பொன்னேரி, ஜன. 18: காணும் பொங்கலை முன்னிட்டு பழவேற்காட்டில்  கடற்கரை, டச்சு கல்லறை, கலங்கரைவிளக்கம், மரக்கட்டையால் உருவான மகிமை மாதா தேவாலயம், நிழல் கடிகாரம் உள்ளிட்டவற்றை காண  ஆயிரக்கணக்கான மக்கள் சுற்றுலா பயணிகள் குவித்தனர்.காணும்பொங்கலை முன்னிட்டு காலை முதலே சுற்றுலா பயணிகள் மக்கள் கூட்டம் பழவேற்காட்டில் அலைமோதியது. அங்குள்ள கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கடலில் இறங்கி, குதூகல  கொண்டாட்டம் போட்டனர்.

சிறுவர், சிறுமியர் கடல் அலையில் குதித்து மகிழ்ந்தனர். அங்குள்ள முருகன் கோயில் மற்றும் மரக்கட்டையால் உருவான மகிமை மாதா ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிலும் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி  தரிசனம் செய்தனர். இதேப்போன்று டச்சு கல்லறை, கலங்கரை விளக்கம், நிழல் கடிகாரம் ஆகியவற்றை கண்டுகளித்தனர்.

காணும்பொங்கலை ஒட்டி கடற்கரை பகுதியில் பலூன் சுடுதல், வளையம் எறிதல், ரங்க ராட்டிணம், நொறுக்கு தீனி போன்று, ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இவற்றில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  ஆர்வத்துடன் விளையாடி மகிழ்ந்தனர்.

பெரியவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை கடற்கரை மணலில் அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். அப்போது, பலர் கடற்கரையில் தங்களுடைய செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டனர். வழக்கம்போல்  இந்த ஆண்டும் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டதால் படகுகளில் சென்று பறவைகள் சரணாலயத்தை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பெண்கள் மற்றும் முதியோர் கடும் சிரமப்பட்டனர். சுற்றுல்லா பயணிகள் வருகையால் பழவேற்காடு மீன்சந்தை களைகட்டியது. வழக்கத்தைவிட மீன்கள்  அதிகமாக விற்பனை ஆனதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. காணும்பொங்கலையொட்டி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: