கோகுல்ராஜ் கொலை வழக்கில் தோழி உள்பட 7 பேரிடம் மீண்டும் விசாரணை

நாமக்கல், ஜன.11:  கோகுல்ராஜ் கொலை வழக்கில், அவரது கல்லூரி தோழி உள்பட 7 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த, அரசு தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த இன்ஜினியர் கோகுல்ராஜ்(23) கொலை வழக்கில், சாட்சிகள் விசாரணை, கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கோகுல்ராஜின் தாய் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன், கல்லூரி தோழி சுவாதி உள்ளிட்ட 27 பேரிடம், இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நேற்று, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது இவ்வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜ்(43), டிரைவர் அருண்(23) உள்பட 15 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், திருச்செங்கோடு விஏஓ மணிவண்ணன் நேற்று  நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் இன்று (11ம் தேதி) நடைபெறும் என நீதிபதி இளவழகன் அறிவித்தார். விஏஓ மணிவண்ணனிடம் தொடர்ந்து இன்றும் விசாரணை நடைபெறுகிறது.  இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி மோகன் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின்போது, இவர் ஆஜரானார். அப்போது, ஏற்கனவே சாட்சியம் அளித்த கோகுல்ராஜின் தாய் சித்ரா, அவரது அண்ணன் கலைச்செல்வன், கல்லூரி தோழி சுவாதி உள்பட 7 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என சிபிசிஐடி போலீசார், அரசு வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது இன்று (11ம் தேதி) விசாரணை நடைபெறுகிறது

Related Stories: