அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்

தர்மபுரி, ஜன.11: தர்மபுரி மாவட்டத்தில், பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க, ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி பேசினார்.தர்மபுரி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், அனைத்து மேல்நிலைப்பள்ளி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் பொன்முடி, உஷராணி, கொழந்தைவேலு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், முதன்மை கல்வி அலுவலர் பேசியதாவது:

அரையாண்டு தேர்வில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலை கொண்டு குறைந்த மதிப்பெண் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களிடம், தனி கவனம் செலுத்த வேண்டும். மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும். மார்ச் 1ம் தேதி தொடங்கும் அரசு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுக்கவும், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் இருந்து அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்பு நடத்தப்பட உள்ளது. அதற்கு தகுந்த ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: