பி.துறிஞ்சிப்பட்டி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.11: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அருகே நேற்று நடந்த ஆட்டு சந்தையில் ₹3கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. பாப்பிரெட்டிப்பட்டி அருகே  பி.துறிஞ்சிப்பட்டியில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் ஆடு சந்தை கூடுவது வழக்கம். இதேபோல் நேற்றும், ஆடு சந்தை கூடியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகாலை சுமார் 5மணி முதலே குளிரையும் பொருட்படுத்தாமல் மெணசி, பொம்மிடி, பள்ளிப்பட்டி, பந்தாரசெட்டிப்பட்டி, மணிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் சந்தையில் குவிய தொடங்கினர். சந்தைக்கு 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. தரம் வாரியாக ஒரு ஆடு ₹4 ஆயிரத்தில் இருந்து ₹13 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆடுகளை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். நேற்று மட்டும் மொத்தம் ₹3 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. அதிகாலை முதலே சந்தையில் வியாபாரிகள், விவசாயிகள் குவிந்ததால் வழக்கத்தை விட சந்தையில் நேற்று விற்பனை களைக்கட்டியது.

Related Stories: