அரூர் பகுதியில் திருமண உதவித்தொகை வழங்க அலைக்கழிப்பு

அரூர், ஜன.11: அரூர் பகுதியில் பயனாளிக்கு திருமண உதவி தொகை வழங்க அலைக்கழிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் படித்த ஏழை பெண்களுக்கு, திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா இன்று 11ம் தேதி அரூரில் நடக்கவுள்ளது. இதில், 325 பயனாளிகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் வழங்கவுள்ளனர். இந்நிலையில் பயனாளிகளை அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அதிகாரிகள் வரவழைத்து, கையெழுத்து பெறாமல், 2நாட்களாக அலைக்கழித்து வருவதாக, பெண்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.இது குறித்து பயனாளிகள் கூறுகையில், ‘திருமணம் முடிந்த எங்களின் பெண்களுக்கு, தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி பெற, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்தோம். இந்நிலையில், அரூரில் நடக்கவுள்ள விழாவில், தாலிக்கு தங்கம் வழங்கப்படும் எனவும், அதற்காக ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்துக் கொண்டு, அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து கையெழுத்து போடுமாறு, கடந்த 8ம் தேதி அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கடந்த 2நாட்களாக அலுவலகத்திற்கு, காலை 9 மணிக்கு வந்து இரவு 7மணிக்கு திரும்பி செல்கிறோம். இது வரை கையெழுத்து பெறவில்லை. அதிகாரிகள் அலட்சியத்தால், கோட்டப்பட்டி, சிட்லிங் உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்து வந்து, பசியுடன் அலுவலக வளாகத்தில் காத்திருக்கிறோம்,’ என்றனர்.

Related Stories: