ஆசிரியர்கள் கட்டாய பணிமாற்றம் கண்டித்து 18ம் தேதி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜன. 11: எல்கேஜி, யுகேஜிக்கு இடைநிலை ஆசிரியர்களை கட்டாய  பணிமாறுதல் அளிக்கும் பள்ளி கல்வித்துறையை கண்டித்து வரும் 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை  செயலாளரும், பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அளவில் இயங்கி வரும்  ஊராட்சி நடுநிலைப்பள்ளியோடு இணைந்துள்ள அங்கன் வாடிகளில் நர்சரி பள்ளிகளை துவங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி  வகுப்புகளான நர்சரி பள்ளிகளை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில்  இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிய கூடியவர்களை உபரி ஆசிரியர்கள் என  காரணம் கூறி புதிதாக துவங்கவுள்ள பள்ளிகளுக்கு இதுவரை நடைமுறையில்  இல்லாதபடிக்கு கல்வி ஆண்டுக்கு இடையே கட்டாய மாறுதல் அளிப்பது கண்டனத்துக்குரியது.

இது ஆசிரியர்கள் மத்தியில் மன உளைச்சல், அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்களது பணிக்காலத்தை குறைத்து மதிப்பிடும்  விதமாக கீழ்நிலை வகுப்புகளுக்கு மாற்றுவது பெருத்த அவமதிப்பாகவும்  ஆசிரியர்கள் கருதுகின்றனர். இதை கண்டித்து பெரம்பலூர் மட்டுமன்றி  அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வருகிற 18ம் தேதி ஆசிரியர் கூட்டமைப்புகளான  ஜாக்டோ, ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் தொடக்க பாட வகுப்புகளான  எல்கேஜி, யுகேஜி பாடத்திட்டத்தை அமல்படுத்துவதை வரவேற்கும் ஆசிரியர்  இயக்கங்கள், அதற்கென தனியாக பிரத்தியேக பயிற்சி பெற்றவர்களை  பயன்படுத்த வேண்டும். மாறாக பணியில்மூத்த, இடை நிலை ஆசிரியர் களைப்  பயன்படுத்துவது வருத்தமளிக்கிறது. இது மாவட்ட நிர்வாகம் மறுபரிசீலனை  செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: